பட்டு

ஆசிரியர்: அலெசான்ட்ரோ பாரிக்கோ தமிழில் : டாக்டர் P. சுகுமாரன்

Category மொழிபெயர்ப்பு
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 120
First EditionDec 2012
3rd EditionJul 2015
ISBN978-93-81969-64-9
Weight200 grams
Dimensions (H) 23 x (W) 16 x (D) 1 cms
$4.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

பட்டு மென்மையானது, வழுவழுப்பானது, நெகிழ்வானது என்று எத்தனை வர்ணனையான வார்த்தைகளும், அதை ஸ்பரிசித்துப் பார்த்து உணர்வதற்கு ஈடாவதில்லை.
முப்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்தப் புத்தகமும் அப்படித்தான்.
பட்டு நூல் உற்பத்தியில் புரிந்த சாதனையின் மூலம் பிரான்சில் உள்ள லாவில்லேடியூவை ஒரு பணக்கார ஊராக உருவாக்குகிறார் பல்தாபியோ. அவரின் பரிந்துரையால் ராணுவனான ஹெர்வே ஜான்கர் பட்டு புழு முட்டைகளை வாங்கி விற்கும் வியாபாரியாகிறான்.
அண்டை நாடுகளில் இருந்து பெறப்பட்டு வந்த பட்டு புழு முட்டைகள், நோய் தொற்றால் தரமற்று போக... உலகத்தின் மறுகோடியில் இருக்கும் ஜப்பானுக்குச் செல்கிறான் ஹெர்வே.
அன்றைய அரசியல் நிகழ்வுகளின் பின்னணியில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பயணப் பாதைகளின் வழியே காடு, மலை, கடல் தாண்டி பயணிக்கிறது கதை..
பத்தொன்பதாம் நூற்றாண்டு பெண்ணான ஹெலன்...கல்யாணம், குடும்பம், காதல், கட்டுப்பாடு என ஒரு மனைவிக்கான அனைத்து கடமைகளையும் செய்பவள்.
ஹெர்வே ஹெலனின் கணவன். தங்கள் நாட்டுச் சட்டங்களைப் பின்பற்றும் அதே சமயத்தில் அடுத்த நாட்டுச் சட்டங்களை மீற யோசிக்காத ஒரு பிரெஞ்சு கனவான். அவன் ஜப்பானில் சந்திக்கும் கிராம தலைவனான ஹரா கீய்யின் மனைவியின் பால் முதல் பார்வையிலேயே ஈர்க்கப்படுகிறான்.
ஹரா கீய்யின் மனைவி, ஹரா கீய்யின் முன்னிலையிலேயே ஹெர்வேயை சஞ்சலப்படுத்தும் சமிக்ஞையைத் தருகிறாள். ஹரா கீய்யின் கட்டுப்பாடுகளில் இருந்து வெளியேற முயற்சிப்பவளாக, ஒரு கூண்டு பறவையாகக் காட்சிப்படுத்தப்படுகிறாள்.
அவள் கண்களுக்குக் கீழ்த்திசைச் சாயல் இல்லாமல் இருப்பதும், அவள் ஹெர்வேயிற்கு விடுக்கும் அழைப்புமே... அவளை, ஹரா கீய் பலவந்தமாகத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதாக ஹெர்வேயிற்கு எண்ணத் தோன்றுகிறது.
“திரும்பி வா, இல்லையென்றால் இறந்துவிடுவேன்” என்கிற அவளது கடிதம் அதை ஹெர்வேயிற்கு ஊர்ஜிதப்படுத்துகிறது.
ஒரு முறை கூட அவள் குரலை கேட்காதபோதும், அவளைப் பற்றி எதுவுமே தெரியாதபோதும்… தனக்குக் கிட்டாத விலைமதிப்பற்றவள் என ஹெர்வே எண்ணுவதாலேயே உயிரையே பணயம் வைக்கும் அளவுக்கு வேட்கை கொள்கிறான்.
//கீழ் திசை நாடுகளில் மனைவிகளின் கற்பைப் பாராட்ட விரும்பும் கணவர்கள் வழக்கமாக நகைகளைக் கொடுக்க மாட்டார்கள், அபூர்வமான பறவைகளைத்தாம் கொடுப்பார்களாம்//
ஹரா கீய்யின் மாளிகையின் முன்பு ஒரு மிகப் பெரிய கூடு... விசுவாசம், கடமை, சட்டம் என்பதைச் சொல்லி மிரட்டியபடி அதில் நிறைந்திருக்கிறது விலையுயர்ந்த அறிய வகைப் பறவைகள்.
வியாபாரத்துக்காக வெளிநாடுகளுக்குச் சென்று ஹராகீய்யின் மனைவியின் பால் ஈர்க்கப்பட்டாலும், ஹெர்வே அவன் மனைவி ஹெலனிடம் செய்த சத்தியத்திற்காகவும், அவனிடம் அவள் கொண்ட விசுவாசத்திற்காகவும் திரும்ப ஹெலனிடமே வந்து சேர்கிறான். கணவனுக்காகக் கணவன் விரும்பும் பெண்ணாகவும் மாறத் துணிகிறாள் ஹெலன்.
கதைக்காக அல்ல கதை கூறப்பட்ட முறைக்காகவே இந்த நாவல் க்ளாசிக் தன்மையை அடைகிறது.
கச்சிதமான தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதையான வார்த்தைகள்...ஒவ்வொரு கதாபாத்திரங்களின் மனநிலையை வார்த்தைகளால் சொல்லாமல் அந்தச் சூழலை கொண்டும் மற்ற கதாபாத்திரங்களின் செய்கையின் மூலமாகவும் காட்சியாக வரையப்பட்டிருக்கிறது.
ஆமாம், வரையதான் பட்டிருக்கிறது… ஒவ்வொரு அத்தியாயமும், ஒவ்வொரு வரிகளும் கூட ஓவியமாய் வரையப்பட்டிருக்கிறது.
இந்தப் புத்தகத்தை வாசித்தது ஒரு அனுபவம் தான்… உள்வாங்கும் ஒவ்வொரு வார்த்தையும் உணரும் வாசிப்பின்பம்.
அருமையான மொழிபெயர்ப்பு.
புத்தகத்தை வாசித்து முடித்த பின்பு, கதை கூறும் முறையில், எழுத்து நடையில், கவிதையான மொழி அமைப்பில் பெரும் பிரமிப்பு எழுந்தது.

உங்கள் கருத்துக்களை பகிர :