ஊர் நடுவே ஒரு வன தேவதை

ஆசிரியர்: சுரேஷ் பரதன்

Category கட்டுரைகள்
Publication நான்காவது கோணம்
FormatPaper Back
Pages 112
First EditionJan 2018
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$4       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

நெஞ்சில் குவிந்திருக்கும் நினைவின் சுவடுகளை பெயர்த்தெடுத்தோமேயானால் ஏடுஏடாக வந்துகொண்டேயிருக்கும். எல்லாவற்றையும் கவிதையாக்கிட முடியாதல்லவா.? தன் ஊரை, ஊரிலிருக்கும் வீட்டை, வீட்டின் தாழ்வாரங்களை, திண்ணையை, தன் பால்ய காலத்தை, அதில் வந்து போன சினேகிதியை, மட்டுமல்லாது மக்கட்பேறன்றி வாழ்ந்த ராதாபுரத்தாச்சியின் வீட்டை, ஊரில் ஓடிய நதியை, நதியின் முதுகில் வளர்ந்த காதலை, அதே நதியை சாட்சியாக வைத்து முறிந்த காதலை, "அரசியல் வியாதிகளால்" களவு போன தனதூரின் நதியென இப்படி தனது வாழ்வியலின் நிகழ்வை எழுதி வாசகனின் நெஞ்சிலும் நினைவுகளை கீறிவிட்டு தன் வயப்படுத்திக்கொள்கிறார் கவிஞர்.

சரி இது ஒருபுறம் என்றால். பால்யத்தை கழற்றிவைத்துவிட்டு விட்டு நவநாகரிக ஆடைதரித்து ந(ர)கரத்தில் வாழுகின்ற சாம்சாரியின் அதிகாலையை, தினமும் தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஊழியம் செய்ய வரும் வெளிமாநில வேலைக்கார ப் பெண்ணை, துரோகத்தை, தன் மனசாட்சியை,பொன் முட்டை போலான ஞாயிறுகளை, குடும்பமாக கழிக்கும் ஞாயிறை, தன் துணைவி "ஞாயிற்றுக்கிழமை தேவதையாவதை" "நகர்ப்புற வாசம்" ஒவ்வாது தங்கும் தன் தந்தையின் உயிர் நீட்சியென பாஸ்ட் புட் யுகத்தில் வெந்து கருகும் மானுடவாழ்வையும் அச்சு பிசகாமல் வெளிச்சமிட்டு காட்டுகிறார் தன் கவிதையில்.
இதையெல்லாம் கடந்து ரயிலில் பாடி கிடைக்கும் காசில் நாட்களை கடத்தும் ஒரு விழியிழந்த பாடகனுக்காய் 92-ம் பக்கத்திலிருக்கும் "வதை" எனும் கவிதையில் தன் இயலாமையை எண்ணி தன்னையே ஒரு திருடனாக்கிக் கொள்கிறார் கவிஞர்.
கவிஞர்களிடம் கருணையிருப்பது வழமை தான் ஆனால் தன்னையே தாழ்த்தி ஒரு யாசகனை உயர்த்திப்பாடுகையில் இவரின் இரக்க குணம் நம்மை முகத்திலறைகிறது.

காலம் காலமாக தான் வாழ்ந்த வீட்டினை பிரியும் போதோ அல்லது வீட்டில் வளர்க்கப்படும் நாயோ பூனையோ, ஆடோ மாடோ நமைவிட்டு பிரிகையில் துயரங்கொள்வது எல்லோருக்குமான இயல்பு. தன் வீட்டுத் தோட்டத்தில் இருந்த பூவரச மரத்தையும், தென்னை மரத்தையும் வெட்டி தாத்தா காலத்தில் வெட்டப்பட்ட கிணற்றை இடவசதி போதாமையில் இன்னொரு படுக்கையறைக்கு அடித்தளம் தோண்ட மூடிய காலத்தில் வீட்டிலிருக்கும் அனைவரும் உண்ணாமலிருந்து வருந்தியதை காட்சிகளாக்கி படிக்கையில் படிப்பவர்க்கும் கண்கள் நிறையும்.
"தோட்டத்துக் கிணறு" (பக்-46).

கவிதையென்பது வெறும் வார்த்தைகளின் கோர்வையல்ல. அழகியல் மொழியோடு தேர்ந்தெடுத்த சொற்களால் புனையும்போதே கவிதையாகிறது. அவ்வகையில் தனக்கே உரிய நடையில் ஒன்றிரண்டு தென் தமிழகத்தின் வட்டார வழக்கிலிருந்து மறைந்த சொற்களையும் பயன் படுத்தி எழுதியிருப்பது இன்னும் அழகூட்டுகிறது.
80களில் எழுதியவர்களின் பெரும்பாலான கவிதைகளில் ஒருசில தொடர் சொற்களை சேர்த்தெழுதியிருப்பார்கள் அதுபோல கவிஞரும் பெரும்பாலான கவிதையில் வார்த்தைகளை சேர்த்தெழுதியிருப்பது அழகு.! உதாரணமாக
"பரண் மேலிருக்குந் தொட்டில்" எனும் தலைப்பை நான் எழுதியிருந்தால்
பரண் மேலிருக்கும் தொட்டில் என்றே எழுதியிருப்பேன்.
இப்படி எத்தனையோ வார்த்தை இருக்கிறது.
"மௌனமே காதலாய்" பக்-89 ல்

"மௌனச்சங்கிலி கொண்டு
கால் விலங்கு பூட்டிக்கொண்டிருந்தாய்"

என்று எதிர்பாராத உவமைகளையும் கொட்டிவிடுகிறார் பல கவிதைகளில்.
அதில் இன்னும் ஒன்றை மட்டும் சொல்கிறேன்.
ஊர் நடுவே ஒரு வன தேவதை பக்-63 ல் இருக்கும் கவிதையில் "சிகையுலர்த்துமழகை" என்ற வார்த்தையை பலமுறை ரசித்து படித்தேன். நீங்களும் வாங்கி வன தேவதையின் அழகை ரசித்து பாருங்கள். மனதை கீறி மயலிறகால் வருடுவாள்.

உங்கள் கருத்துக்களை பகிர :